காசிக்கு சமமான ஆறு தலங்களுள் ஒன்று. 'ஆதி சிதம்பரம்' என்றும் 'சுவேதாரண்யம்' என்றும் அழைக்கப்படுகிறது. அம்பிகை இத்தலத்தில் மதங்க முனிவருக்கு மகளாகப் பிறந்து மாதங்கி என்று பெயருடன் வளர்ந்து வந்தாள். சுவேதாரண்யரை நோக்கி தவம் செய்து அவரை மணந்துக் கொண்ட தலம். இத்தலத்தில் சிவபெருமான், எமனைக் கொன்றதாக வால்மீகி ராமாயணமும், சம்பந்தர் தேவாரமும் கூறுகின்றன. சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றள்ள தலம்.
மூலவர் 'சுவேதாரணியேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சுயம்பு மூர்த்தியாக, சற்று உயரமான பாணத்துடன், லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பிகை 'பிரம்மவித்யா நாயகி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள். பிரம்ம தேவருக்கு வித்தை கற்றுக் கொடுத்ததால் இப்பெயர் பெற்றாள். இங்கு சுவாமி சன்னதிக்கு எதிரே அம்மன் சன்னதி உள்ளது குறிப்பிடத்தக்கது. அம்பிகையின் சக்தி பீடங்களுள் ஒன்று. இது 'பிரணவ பீடம்' என்று அழைக்கப்படுகிறது.
மற்றொரு மூர்த்தி அகோர வீரபத்திரர். எட்டு திருக்கரங்களுடன், கையில் சூலாயுதத்துடன் சுமார் 10 அடி உயரத்துடன் கம்பீரமாக காட்சி தருகின்றார். இது சிவபெருமானின் 64 மூர்த்தங்களுள் 43வது வடிவம் ஆகும். எதிதில் காளி தேவி சன்னதி உள்ளது. மருத்துவாசுரன் என்னும் அசுரனை அழிப்பதற்காக சிவபெருமானின் ஈசான்ய முகத்தில் இருந்து தோன்றியவர்.
மூன்றாவது மூர்த்தி இங்குள்ள நடராஜர். சிதம்பரத்தில் இருப்பது போன்றே சிதம்பர ரகசியமும், ஸ்படிக லிங்கமும் உள்ளது. இங்கு நாள்தோறும் ஸ்படிக லிங்கத்திற்கு நான்கு அபிஷேகங்களும், நடராஜருக்கு ஆண்டுதோறும் ஆறு அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.
நவக்கிரகங்களில் புதன் தலமாக வணங்கப்படுகிறது. புதன் இத்தலத்து இறைவனை வழிபட்டு நவக்கிரக பதவி அடைந்தாகக் கூறப்படுகிறது. இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் எல்லாம் மூன்று உள்ளன. கோயிலின் அக்னி மூலையில் அக்னி தீர்த்தமும், தெற்குப் பிரகாரத்தில் சூரிய தீர்த்தமும், வடக்குப் பிரகாரத்தில் சந்திர (சோம) தீர்த்தமும் உள்ளன. இதை 'முக்குளம்' என்று கூறுவர்.
இங்கு பித்ரு கடன் செய்வது விஷேசமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக பித்ரு தோஷம் உள்ளவர்கள் இங்கு பரிகாரம் செய்யலாம். இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு வழிபாடு செய்ய வேண்டும். கயாவில் உள்ளது போலவே அழியாத அட்சயவடம் (ஆலமரம்) உள்ளது. அங்கு 'விஷ்ணு பாதம்' உள்ளது போல் இங்கு இந்த ஆலமரத்தின் கீழ் 'ருத்ர பாதம்' உள்ளது.
பெண்ணாடகத்தைச் சேர்ந்த அச்சுதக் களப்பாளர் தமக்கு குழந்தை பாக்கியம் வேண்டி, தமது ஆசிரியரான அருணந்தி சிவாச்சாரியாரை அணுகினார். அவரது அறிவுரைப்படி இத்தலத்திற்கு வந்து முக்குள நீராடி சிவபெருமானை வழிபட்டு ஆண் மகவைப் பெற்று, இக்கோயிலின் இறைவன் பெயரான 'சுவேதவனப் பெருமாள்' என்னும் திருநாமம் இட்டார். இக்குழந்தையே பிற்காலத்தில் சைவ சித்தாந்தத்தை இயற்றிய 'மெய்கண்ட தேவர்' ஆவார். இவரது சன்னதி சோம தீர்த்தம் அருகில் உள்ளது.
இத்தலத்து பெருமானின் அருளினால் தான் பட்டினத்தார் அருகில் உள்ள பூம்புகாரில் (காவிரிப்பூம்பட்டினம்) தோன்றினார். அவரது இயற்பெயர் 'திருவெண்காடர்' என்பதாகும். அவர் குபேரனின் அம்சமாகக் கருதப்படுபவர். இத்தலத்து இறைவனே அவரை ஆட்கொண்டார் என்பது பட்டினத்தார் வரலாறு.
சம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது ஊரெல்லாம் சிவலிங்கமாகத் தெரிய, காலால் மிதிக்க அஞ்சி நின்றார். இதைக் கண்ட அம்பிகை, பெண் உருவெடுத்து வந்து சம்பந்தரை தமது இடுப்பில் தாங்கி கோயிலுக்குள் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதனால் அம்பிகை 'இடுக்கி அம்மன்' என்று அழைக்கப்பட்டாள். அம்மன் பிரகாரத்தின் இடது மூலையில் சம்பந்தரை இடுப்பில் இருத்தியபடி உள்ள இடுக்கி அம்மன் சன்னதி உள்ளது.
தேவேந்திரனும், வெள்ளை யானையும் பூசை செய்து வழிபட்ட தலம்.
திருஞானசம்பந்தர் மூன்று பதிகங்களும், திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர். மாணிக்கவாசகர் திருவாசகத்திலும் இத்தலம் இடம் பெற்றுள்ளது.
இக்கோயில் காலை 6 மணி முதல் 12 வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 வரையிலும் திறந்திருக்கும். |